சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சி!

தொடு வானத்திற்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துயரத் தீர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் போன்றே தோன்றுகிறது.

எத்தனை இலட்சம் மனித இழப்புகள், எத்தனை கோடி பொருளாதார இழப்புகள், ஆதரவற்றவர்களாக மர நிழல்களின் ஓரங்களில் அண்டி நிற்கும் தமிழ் மக்களின் பெருங்கூட்டம். இவர்கள் அனைவருக்குமே பிரச்சினையின் தீர்வு தொடுவானத்தை நோக்கிய பயணமாகத்தான் அமைந்து போனது.

எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டென்றால் தமிழர் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்கிறது. இது ஆதாரமற்ற நம்பிக்கை அல்ல. இன்றைய அரசியல் வாழ்வில் உள்ளீடாக அமைந்த வலிமை மிகுந்த சாத்தியங்கள். இந்த சாத்தியங்கள் குறித்து. தமிழக மக்கள் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சிலரால் வலிந்து பிரசாரம் செய்யப்படுவதைப்போல இலங்கை இனப் பிரச்சினையின் அடிப்படை தமிழ் மக்களின் அதிதீவிர ஆயுத நடவடிக்கைளில் இல்லை. இப்படியொரு மாயத்தோற்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி வைத்து விட்டார்கள். பயங்கரவாதத்தை ஒழித்து விட்டுதான் தமிழர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதான இலங்கை அரசாங்கத்தின் மாய அரசியலுக்கு இந்தப் பொய்க் கட்டுமானம் இன்று வரை உதவி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து பார்த்தால் இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதம் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலும்.

இலங்கைக்கான சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கிய தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இன்னமும் இலங்கையில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இந்தப் போராட்டத்தின் இன்றைய வயது 60. ஆரம்பத்தில் இந்தப் போராட்டம் காந்தியின் அறவழிப் போராட்டமாகத்தான் தொடங்கியது. தமிழ் மக்களின் உரிமைப் போரைத் தலைமையேற்று நடத்திய தந்தை செல்வா அன்றைய காலத்தில் ஈழத்தின் காந்தி என்றே அழைக்கப்பட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தையும் சாத்தியாக்கிரகத்தையும் தவிர வேறு எதையும் அன்றைய ஈழ மக்கள் அறிந்திருக்கவில்லை.

1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று இலங்கை அரசு அறிவித்தது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தலைமையில் சுமார் 200 தொண்டர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் உண்ணாவிரதம் இருந்தார்கள். காந்தியின் தொண்டர்களாகவே கருதி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை சிங்களக் காடையர்கள் என்று அழைக்கப்படும் ரௌடிகளும், காவல்துறையும் இணைந்து மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். துப்பாக்கி சூடு நடந்து இருவர் இறந்து போனார்கள். இந்தக் கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் தான் 35 ஆண்டுகளாக நடத்திப் பார்த்த காந்திய வழி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணிகளை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு இணைந்து வாழத்தெரியாத முரண்பாட்டில் தான் பிரச்சினைகள் முளைவிடுகின்றன என்ற மனநிலையை நம்மிடம் உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. சிலர், இதற்கும் ஒரு படி மேலே சென்று, இலங்கைக்கு பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள் அந்த நாட்டவரிடம் இணங்கி, அடங்கி நடக்க வேண்டாமா? என்று உபதேசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தமிழகத்திலிருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் மலையகத்திற்கு கூலிகளாகச் சென்றுள்ளார்கள் என்பது உண்மைதான்.

இலங்கையின் தேசிய வருமானம் பெருக, முதல் விதையை விதைத்தவர்கள் இவர்கள்தான். ஆங்கிலேயரின் புள்ளிவிபரம் ஒன்று பேரதிர்ச்சியைத் தருகிறது. தேயிலைத் தோட்டம் அமைக்கும் கடும் உழைப்பில் ஈடுபட்ட தமிழ் மக்கள், 1841 முதல் 1858 வரை தொற்றுநோயாலும் மலையைப் பிளந்து பாதை அமைக்கும் விபத்துக்களினாலும் சுமார் 90 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்பதுதான் இந்த அதிர்ச்சி. இவர்களின் சந்ததியினரில் 5 இலட்சம் தமிழ் மக்கள் லால்பகதூர் சாஸ்திரி பண்டாரநாயக்க ஒப்பந்தத்தின்படி அந்த நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

உலகில் எந்த நாடாக இருந்தாலும் சில ஆண்டுகளாக அந்த நாட்டில் குடியிருந்தால் அவர்களை அந்த நாடு குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. இன்றும் இலங்கைக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலைத் தோட்டங்களை ஆதியில் தங்கள் இரத்தத்தால் பத்தி கட்டி உருவாக்கிய, தமிழ் மக்களை அந்த நாட்டைவிட்டு வெளியேற்றிய குற்ற உணர்வு எந்தச் சிங்கள அரசியல் தலைவருக்காவது இருக்கிறதா?

மலையகத் தமிழர்கள், காலனிய காலங்களில் இலங்கை சென்றனர் என்பது உண்மை என்றாலும், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்கள், இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அல்லர். சிங்கள மக்களுக்கு இணையான பூர்வீக உரிமையை இலங்கை மண்ணில் பெற்றவர்கள். தமிழ் மக்கள் தொன்மைக்காலம் முதல் தங்களுக்கான தனித்துவ ஆட்சியை இலங்கைக் கடலில் செலுத்தி வந்துள்ளார்கள். கல்வெட்டுகளும், இலக்கியங்களும் கூறும் இதற்கான ஆதாரங்களை சிங்கள வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த வரலாற்று பூர்வீகத்தை யுத்தத்தின் மூலம் அழிக்க முயற்சித்தால், எப்படி அதனை ஏற்றுக்கொள்ளுதல் இயலும்?

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கை அரசு தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதிலேயே தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்துள்ளது. இரண்டாம் தர குடிமக்களாக்கும் திட்டத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைப்பது முதலாவது நோக்கமாகத் தெரிகிறது.

கிழக்கு மாகாணத்தைக் குறிவைத்து அங்கிருந்த தமிழ் மக்களை வன்முறையால் வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை ஒரு புள்ளி விபரம் தெளிவுபட விளக்குகிறது. 1827 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருகோணமலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 663 பேர். ஆனால் சிங்கள மக்களின் எண்ணிக்கை 250 பேர் மட்டும்தான்.

இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மக்கள் இந்தப் பகுதியில் பெரும்பான்மை பெற்று வருகின்றார்கள். தமிழ் மக்கள் மீதான தாக்குதலை ஒருபுறத்தில் இவ்வாறு நடத்திக் கொண்டே, மறுபுறத்தில் இலங்கை, பெரும்பான்மை சிங்கள இனத்திற்குச் சொந்தமான நாடு என்பதை சட்டபூர்வமாக மாற்றிக் கொள்ளும் தந்திரத்தைப் பின்பற்றி வந்துள்ளது. இலங்கைக்கான முதல் அரசியல் சட்டம் அழைக்கப்படுகிறது.

இது அடிப்படையில் மாநில அரசு, மத்திய அரசு என்று கூட்டாட்சி இல்லாமல் ஒரே அரசாங்கத்தைக் கொண்ட, ஒற்றையாட்சியாக இருந்தபோதிலும், ஒற்றையாட்சி என்றோ அல்லது கூட்டாட்சி என்றோ இது தன்னை அழைத்துக் கொள்ளவில்லை.

அடிப்படையில் இதனை ஆராய்ந்து பார்த்தால், அரசியல் சட்டத்தை அமைத்தவர்களுக்கு இது எதிர்காலத்தில், இலங்கை கூட்டாட்சியாக பரிணாமம் பெற வேண்டும என்ற நோக்கம் இருந்ததை உணர்ந்து கொள்ளல் இயலும்.

1972 ஆம் ஆண்டில் தான் இலங்கையில் முதல் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர இலங்கையில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, இனப்பிரச்சிணையை முற்றாக தீர்க்கும் அரசியல் சட்டத்தை வகுத்திருக்க முடியும்.

இலங்கை அரசு இதற்கு நேர் எதிராகச் செயல்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிக் கொடுத்த சிறுபான்மை தமிழர்களுக்கான பாதுகாப்பை இது முற்றாக நீக்கிவிட்டது. முதல் முறையாக இலங்கை கூட்டாட்சி நாடு அல்ல. இது ஒற்றையாட்சி தான் என்று அரசியல் சட்டம் உறுதி செய்து அறிவித்தது.

இதற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட எவையும் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறுபான்மை மக்களைப் பெரிதும் அடிமைப்படுத்திக் கொள்ளும் ஒற்றையாட்சி முறையை மேலும் மேலும் வலுவாக்கிக் கொண்டன.

அரசியல் சட்டத்திலும் பாதுகாப்பு இல்லை. அரசு தனது பயங்கரவாதக் கொடுமைகளை நிறுத்திக் கொள்வதாக இல்லை. அடுத்து தமிழ் மக்கள் என்னதான் செய்ய முடியும். ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

இன்று தமிழ் மக்கள் என்றும் சந்திக்காத பெரும் துயரத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். விமான குண்டுகளால் இரத்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் உடல்கள், தொலைக்காட்சிகள் மூலம் தோன்றி நமது மனச்சாட்சியைப் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலகில் யார் இதனைக் கண்ணுற்றாலும் கட்டாயம் சகித்துக் கொள்ள இயலாது.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? யுத்தத்தை முழுமையாக ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் தமிழ் மக்களுக்குப் பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கு படைதிரட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில், இலங்கை அரசாங்கத்தை முற்றாக நம்ப முடியாது என்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. நோர்வே நாட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இடைக்கால ஆட்சி நிர்வாகத்திற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை விடுதலைப் புலிகள் அளித்திருந்தனர்.

இதைப்போன்றே கடல்கோள் பாதிப்பு உதவிகளைப் பெறுவதிலும் இலங்கை அரசோடு இணைந்து சில செயல்பாட்டிற்கான அறிவிப்புகளை வெளிப்படுத்தியிருந்தது. அரசியல் தீர்வுக்கான இந்த வளர்ச்சி நிலைகளை இலங்கை அரசு முற்றாகப் புறக்கணித்து, அரசியல் தீர்வுக்கான எந்தத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சிதான் இன்றைய பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும். உலகில் பல நாடுகளில் நடந்துள்ள இனப்பிரச்சினைகள் இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வை பெற்றுள்ளன.

இதற்கு முந்தைய நடைமுறைகளைப் போல் இல்லாமல் இப்பொழுது இலங்கை அரசு தான், முதலில் தங்கள் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதில் தமிழகத்தின் வலிமையான தலையீட்டால் இந்தியா பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும்.

ஆனால், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கான பதிலை மன்மோகன் சிங் விரைவில் சொல்லுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

கட்டுரையாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர்

-சி. மகேந்திரன்-

No comments: