ஜெயலலிதா ராஜபக்ஷவின் ஊதுகுழல் - பழ.நெடுமாறன்: ஒரே பார்வையில் இந்தியக் கண்ணோட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஊதுகுழலாக செயல்படுவதாக பழ.நெடுமாறன் குற்றம்சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் ஈழத் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து இலங்கை ராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதை திசை திருப்பும் வகையில் முதல்-அமைச்சரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும் எனவும் நெடுமாறன் கூறியுள்ளார்.

தங்கள் மக்களையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள விடுதலைப்புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியை கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட்டு, அங்குள்ள ராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இனவெறி அழிப்பை நடத்தி கொண்டிருக்கும் ராஜபக்ஷவின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதல்-அமைச்சராக இருந்தவர். அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலையை பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கைபொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் உணர்வு விஜயகாந்த்துக்கு இல்லை - விஜய டி.ராஜேந்தர்:


தமிழ் உணர்வு இல்லாததாலேயே விஜயகாந்த் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் என விஜய டி.ராஜேந்தர் குற்றம்சுமத்தியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் லட்சிய தி.மு.க. பொது செயலாளர் விஜய டி.ராஜேந்தர் இதனை கூறியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுவதாகவும் மக்களின் கண்ணோட்டத்தில் அ.தி.மு.க., ம.தி.மு.க. தி.மு.க.விற்கு எதிரான கட்சிகள், பாரதீய ஜனதா, காங்கிரசுக்கு எதிரான கட்சி என்பதால் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் உதிரிக்கட்சியாக இருப்பவர்கள், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட விரும்பாத சிலரின் ஓட்டுகளை பெற்று வரும் கட்சி கூட இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்றால் அங்கு எந்த கட்சியாவது புறக்கணிக்குமா? அந்த கூட்டத்திற்கு எதிராக பேச முடியுமா? காரணம் கர்நாடகாவில் இருப்பது இன ஒற்றுமை. ஆனால் இங்கு அந்தளவுக்கு இல்லை என்பதே உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மொழி பேசுகின்றவர்கள் தமிழகத்தில் ஆட்டம் போடவும் முடியும், ஆள நினைக்கவும் முடியும் என்றால் தமிழகத்து தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பான் என அவர்கள் நம்புகிறார்கள் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தை மட்டுமா புறக்கணித்தார், இலங்கையிலிருந்து சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதையும் சாக்குபோக்கு சொல்லி விஜயகாந்த் புறக்கணித்தார். விஜயகாந்துக்கு தமிழ் உணர்வு இல்லை என்பதே இதற்கான காரணம், இதனை தமிழர்கள் இனம் காணவில்லை என்றால் எதிர்காலத்தில் தமிழினம் தமிழகத்தில் இருக்காது என்றும் விஜய டி ராஜேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரை உலகம் பல்வேறு மொழி பேசுபவர்களை கொண்டது. தமிழ்நாட்டுக்கு சென்று நடியுங்கள், சம்பாதியுங்கள். ஆனால் தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என கூறுவதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். இலங்கை பிரச்சினையில் இந்திய பிரதமர் கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் நிலைப்பாடு வலுவாக இருக்க வேண்டும். இந்திய மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் விஜய டி ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் 23-ம் திகதி தொடரூந்து மறியல் போராட்டம் - தொல்.திருமாவளவன்:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் எதிர்வரும் 23-ம் திகதி தொடரூந்து மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். ஈழத் தமிழினம் அழிவதை தடுக்க வலியுறுத்தி தமிழக மக்களிடையே கடந்த சில வாரங்களாக கொந்தளிப்பு நிலவிவருகிறது. அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பிலும் சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்த வரிசையில் 19-10-2008 அன்று திரையுலகத்தினரும் ராமேஸ்வரத்தில் கண்டன அணிவகுப்பு நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரையுலகத்தினரின் மனிதநேயம் மற்றும் இனமான உணர்வுகளை விடுதலை சிறுத்தைகள் நெஞ்சார வரவேற்று பாராட்டுகிறது எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களை பாதுகாத்திட இந்திய அரசு உடனடியாக தலையிடும்படி வலியுறுத்தி 21ஆம் திகதி மனித சங்கிலி அறப்போர் சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகளும் கலந்துகொள்ளும். தமிழர் சங்கிலிப் போராட்டம் டெல்லியை அசைப்பதாகவும், கொழும்பை அச்சுறுத்துவதாகவும் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 23 ஆம் திகதி தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் தொடரூந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடும். அன்று தமிழகத்தின் எந்த திசையிலும் தொடர் வண்டிகள் ஓடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் அனுமதிக்க மாட்டாது என்பதை தெரிவித்து அப்போராட்டத்திற்கும் தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்கள்- சரத் பொன்சேகா- பதவி நீக்க போராட வேண்டும்- ராமதாஸ் :


தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என பகிரங்கமாக அறிவித்துள்ள இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பதவி நீக்கம் செய்ய போராட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை, சிங்கள மக்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஒப்புக் கொண்டு இரண்டாம் தர குடிமக்களாக, அதாவது அடிமையாக வாழ தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். இலங்கை ராணுவத் தளபதியின் இந்தப் பிரகடனம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் விடப்பட்ட சவால் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். இது ஒரு இனத்தின் தன்மானப் பிரச்சினை.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ, தமிழர்களுக்கு சம உரிமை உண்டு என்கிறார். ஆனால் செயலில் எதையும் செய்யவில்லை. அதற்கு மாறாக அவரது தளபதி, தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்று பிரகடனம் செய்கிறார். இப்படிப்பட்ட தளபதி பொன்சேகாவை பதவியிலிருந்து நீக்க தமிழர்கள் போராட வேண்டும். அவரை பதவியிலிருந்து நீக்கி தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என இந்திய அரசு இலங்கையை வற்புறுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக அரசும், முதல்வரும் ஈடுபட வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். அதனை தனித்தூதுவர் மூலம் பிரதமரிடம் அளித்து விட்டோம். பிரதமரும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துவிட்டார். தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்தியாவின் கவலையைத் தெரிவித்து விட்டார்கள்,என்பதோடு கடமை முடிந்து விட்டதாக தமிழக அரசு நினைத்து விடக் கூடாது.
இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் நேரடியாக பேச வேண்டும். இந்தியாவிலிருந்து உடனடியாக தூதுக்குழுவை அனுப்பி போரை நிறுத்தவும், உதவிப் பொருள்களை அனுப்பவும், அமைதி பேச்சு தொடங்கவும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாhர்.

No comments: