"எங்கட சோகம்..." - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி.--ஜூனியர் விக

''ஈழப் பிரச்னைத் தீர்வுக்காகத் தமிழக எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட் டார்கள்'' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அதிர்வோடு அறிவித்த செய்தி,
மத்திய அரசின் கவனத்தை உலுக்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழ நிலைமையை விளக்குவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னை வந்திருந்தார்.

அவரை நாம் சந்தித்தோம்.
''எங்கட மண்ணின் இன்னல் தீர்க்க தமிழக முதல் வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருசேர கைகோத்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கட பலம் வலுப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மருத்துவர் ராமதாஸ், நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், இடதுசாரித் தலைவர்கள், திருமாவளவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினேன்.
இப்போது அடுத்தகட்டமாகப் பிரதமரையும் சந்தித்துப் பேசுகிற முடிவில் இருக்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து எடுத்திருக்கிற ஒத்துணர்வான முடிவு, இந்திய அரசுக்கு எச்சரிக்கையாக அமையும். ஈழ பிரச்னையில் சுமுகச் சூழலை ஏற்படுத்த வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமை நிறைவேற்றப்பட, தமிழகத் தலைவர்கள்தான் துணை நிற்க வேண்டும். இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் கைகொடுப்பும் எங்கட தமிழர்களுக்கு உறுதியான விடிவைக் கொடுக்கும்'' என பீறிட்ட நெகிழ்வுடன் பேசத் தொடங்கினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

''ஈழத்தின் இப்போதைய நிலைபற்றி பலவாறான செய்திகள் வருகின்றன. அங்குள்ள உண்மையான நிலை என்ன?''
''சிங்கள ராணுவத்தின் இனஅழிப்பு வெறி உச்சகட்ட மாகி விட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் வேர றுக்கும் கொடூரப் போரை நடத்திவருகிறது சிங்கள அரசு. ஒரு பொத்தானை அழுத்தினால், எழுபதுக்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும் பல்குழல் பீரங்கிகளையும், சீனா, பாகிஸ்தான் போன்ற வேற்று தேசங்களின் நவீன ராணுவக் கருவிகளையும் கொண்டு, தமிழர் பகுதிகளை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். கிளிநொச்சியில் குண்டு மழை பொழிந்து, தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்துவிட்டனர்... இன்றைக்கு கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஜீவன் கூட இல்லை. அந்த நகரமே தரைமட்டமாகி விட்டது. சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்குப் பயந்து, பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடும் சனங்கள், அங்கேயும் அண்ட நிழலில்லாமல், பாம்புக் கடிக்கும் பசிக் கொடுமைக்கும் ஆளாகி உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தையும் மீன் பிடிப்பையும் நம்பி உழைத்து வாழ்ந்த எங்கட சனங்கள், ஒரு சாண் வயிற்றுக்காகப் பிறர் கைகளை எதிர்நோக்கி வாழ வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். மீன்பிடிப்புக்கு முழுசும் தடை போடப்பட்டு விட்டது. வைத்திய சாலைகள் மூடப்பட்டு விட்டன. தமிழ் சனங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வாய்வார்த்தைகளால் சொல்லி மாளாது!''

''ஐ.நா-வின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தமிழர்களுக்கு உதவவில்லையா?''
''ஐக்கிய நாட்டு சபையின் தொண்டு நிறுவனங்கள், மூன்று வாரங்களுக்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறி விட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மட்டும்தான் இப்போது இலங்கையில் இருக்கிறது. அதுவும் சுடப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் புலிகளின் பிணங்களை அள்ளிச்செல்லும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது... எங்கட மக்களின் சிரமங்களுக்கு அவை ஏதும் செய்யவில்லை. இப்போதைய எங்களின் ஒரே எதிர்பார்ப்பு தமிழகத்தை நோக்கித்தான். குண்டடிப்பட்டும், கொடூரமாகக் குதறப்பட்டும் கிடக்கிற எங்கட மக்களுக்குத் தமிழகத்தின் உதவியால்தான் விடிவு பிறக்கும். ஈழ மண்ணில் தோராயமாக 35 லட்சம் தமிழ் வாழ் சனங்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் ஒருவிரல் எமை நோக்கி நீண்டால்கூட போதும்... எங்களின் இன்னல்கள் களையப்பட்டு விடும்!''

''விடுதலைப்புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்று வரும் செய்திகள் பற்றி..?''
''சந்திரிகா காலத்தில் ஒரு வருடமாகப் போராடி சிங்கள ராணுவம், புலிகளின் மண்ணை 20 கிலோமீட்டர் தூரம் கடந்தது. அப்படி பிடித்த மண்ணை, அடுத்த சில மணி நேரங்களிலேயே மீட்டெடுத்தனர் புலிகள். இதுநாள்வரை ஆறாயிரம் முறை சிங்கள ராணுவம் விமானத் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அவற்றை எதிர்கொள்கிற அசாத்திய பலம் புலிகளிடம் இருந் திருக்கிறது... நாங்கள் அறிந்தவரை, கெரில்ல தாக்குதலை வைத்தே இன்னும் ஐம்பது வருடங்களுக்கும் மேல் சிங்கள அரசுக்குப் புலிகளால் சவாலைக் கொடுக்க முடியும். சிங்கள அரசும் புலிகளும் சொல்லும் போர் நிலவரங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையை ஆராய்ந் தால்தான் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு புரியும். அதிலும், கடந்த இரண்டு வாரங்களாக சிங்கள ராணுவத்தால் ஒர் அடியைக்கூட எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் உயிருணர்வுப் போராட்டத்துக்கு முன், சிங்கள அரசின் வெறித்தனப் போக்கு ஒருபோதும் வெல்லாது!''

''தாங்கள் சந்தித்த தமிழகத் தலைவர்களிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள்?''
''அங்கே எங்கள் தமிழ் சகோதரிகள் விதவைகளாகவும், முதிர் கன்னிகளாகவும் தத்தளித்துக் கிடக்கிறார்கள். தாய், தகப்பன் மரிக்கிறபோது சம்பிரதாயங்களை எல்லாம் தாண்டி, வேறு கதியற்று, பெண்களே கொள்ளி வைக்கிறார்கள். தமிழ்ப் பண்பாடும், கலாசாரமும் பூண்டோடு அழிக்கப்படுகிறது. வாரிசற்ற சமூகமாக எங்கள் மண் மாறுவதற்குள், தக்க தீர்வு ஏற்பட வேண்டும். அது எங்களின் தொப்புள்கொடி சொந்தமான தமிழகத்தின் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் நான் சந்திக்கும் ஒவ்வொரு தலைவரிடமும் வலியுறுத்தி சொல்லிவருகிறேன்'' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
பரிதவிப்பில் கனத்துப் போயிருந்த அவருடைய விழிகளில், விடியலுக்கு ஏங்கும் ஈழ மண்ணின் ஏக்கம் இழையோடியது.

நன்றி: ஜூனியர் விகடன், Oct 22, 2008

No comments: