ஜெயலலிதாவின் கனவு பலிக்காது!! - கனிமொழி ஆவேச பேட்டி

இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படி நிர்ப்பந்திக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள்'' என்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் நிறைவேறிய மறுநாளே, முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி அவரது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் பரபரவென பரவியது. இம்மாதம் 29-ம் தேதியிட்ட அந்த ராஜினாமா கடிதத்தை கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.அதன் எதிரொலியாக `அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கனிமொழி மீது ஒரு வசை கணையை வீசினார். `கனிமொழியின் ராஜினாமா என்பது ஒரு வடிகட்டிய மோசடி. ராஜினாமா கடிதத்தின் காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவுக்கு இல்லை' என வசைமாரி பொழிந்துள்ளார்.இதுதொடர்பாக நாம் கனிமொழியிடம் விளக்கம் கேட்டுத் தொடர்பு கொண்டபோது, முதலில் பேசத் தங்கியவர், சிறிது நேரத்திற்குப் பின்னரே பேச முன்வந்தார்.

வழக்கமாக கனிவான குரலில் பேசும் அவர், இந்த முறை கோபம் கொப்புளிக்க நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய முன் வராவிட்டால் லோக்சபா உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ராஜ்யசபா எம்.பி.யான நீங்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்தீர்கள்?
``ராஜ்யசபா எம்.பி.க்களும் பதவி விலகுவார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, `அவர்களுக்கும் இது பொருந்தும்' என்று தலைவர் பதிலளித்துள்ளார். அதனால்தான் முன்கூட்டியே ராஜினாமா கடிதம் கொடுத்தேன்.''

மத்திய அரசிற்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், நீங்கள் உடனே ராஜினாமா செய்தது `சுய விளம்பரத்திற்காக' என்று கூறப்படுகிறதே?
``நான் சுய விளம்பரம் தேடிக்கொள்வதாக இருந்தால் பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் முன்னிலையில் அல்லவா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும்? நான் ராஜினாமா கடிதத்தைத் தலைவரிடம் கொடுத்தபோது எடுத்த படம் ஏதாவது எந்தப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா? இல்லையே! இந்த நிலையில் இதில் சுய விளம்பரம் தேட என்ன உள்ளது?

'' மத்திய அமைச்சர் அன்புமணியின் பதவிக்கு நெருக்கடி ஏற்படுத்தத்தான், நீங்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே?
``மற்றொரு கட்சியில் உள்ள எம்.பி.யை ராஜினாமா செய்யச் சொல்லி எப்படி நிர்ப்பந்திக்க முடியும்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படியும், எங்கள் தலைவர் அறிவித்ததாலும் நான் ராஜினாமா செய்தேன். அதுபோல், அவர்களது கட்சி முடிவுப்படி அவர்கள் செயல்படுவார்கள்.

''இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், ராஜினாமா கடிதத்தை கனிமொழி ராஜ்யசபா தலைவரிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து அவரது தந்தையிடம் கொடுத்ததால் எழுதப்பட்டிருக்கிற காகிதத்தின் மதிப்புக்கூட அவரது ராஜினாமாவிற்குக் கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
``நான் ராஜினாமா கடிதத்தில் என்ன எழுதியுள்ளேன் என்று அவர் நேரடியாக வந்து படித்துப் பார்த்தாரா? என்ன அர்த்தத்தில், எந்த ஆதாரத்தில் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ராஜ்யசபா தலைவருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தைத்தான் எங்கள் கட்சித் தலைவரிடம் கொடுத்துள்ளேன். அதனை, ராஜ்யசபா தலைவருக்கு அவர்கள் அனுப்பி விடுவார்கள். எனக்கு தலைமையை மீறி செயல்பட்டுப் பழக்கமில்லை.'
'`லோக்சபாவிற்கு முன் கூட்டியே தேர்தல் வந்தால், எம்.பி.க்களின் பதவிக்காலம் மூன்று மாதங்களில் முடிந்து விடும். எனவே, இன்னும் முப்பது மாதங்கள் பதவிக்காலம் இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
``இந்தக் கேள்வி, `சட்டசபைக்குத் தேர்தல் வராதா?' என்ற ஜெயலலிதாவின் ஆசையைத்தான் காட்டுகிறது. எப்படியாவது சட்டசபைக்குத் தேர்தல் வந்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது கனவு பலிக்காது. ஈழத்தமிழர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா, தற்போது முற்றிலும் முரண்பாடாகப் பேசுகிறார். இதுதான் சந்தர்ப்பவாதம்.''1980-ல் தமிழீழத்திற்காகக் குரல்கொடுத்த கருணாநிதி, தற்போது, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தயங்குகிறார் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?``அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி கலந்துகொண்டு,முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவுகளைப் பாராட்டியுள்ளாரே?''
இரா. முருகேசன்

No comments: