இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச நிலை காய் நகர்த்தல்


பீஷ்மர்

இலங்கையின் இனக் குழுமப் போர் கிளிநொச்சி சம்பவத்துடன் அப்பிரச்சினையின் பின்புலம் கூட மறக்கப்பட்டு கிளிநொச்சி நிலைப்பட்ட மக்கட் பெயர்வு பிரச்சினையே இன்று மிகப் பெரிய சர்வதேச நிலை பிரச்சினையாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் அதிகாரத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்கள் வருகின்றார்கள், வரவிரும்புகின்றனர். இதற்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது நடைபெறும் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலாகும். உண்மையில் விமானக் குண்டு வீச்சிலும் பார்க்க ஷெல் தாக்குதலே அதிகரித்துள்ளது. இலங்கையில் இப்பொழுது தடைசெயப்பட்டுள்ள பி.பி.ஸி.யின் தமிழ் ஓசை செதிகளைக் கேட்கின்ற போது, இந்த மக்கட் பெயர்வு குறித்த ஒரு மனப்படிமத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக, அதுவும் ஷெல் வீச்சுத் தாக்குதலினால் அதிகம் கூடியுள்ள "ஆபத்தபாய'(Risk) பயம் காரணமாக மக்கள் அந்தப் பிரதேசங்களில் ஓரிரு அங்குல வெளியில் அசைவதற்குக் கூட பயப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வாகன அசைவியக்கங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் நம்பகமாக அறிந்துகொண்டு அத்தகைய இடங்கள் மீது ஷெல் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடத்துகின்றதாம்.

இந்த மக்கட் பெயர்வு இரண்டு நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, சாதாரண மக்கள் சற்று அதிகமான தொகையினராகவே வெளியேற விரும்புகின்றமை. இது விடுதலைப் புலிகளின் ஆள்நில பரிபாலனத்துக்கும் காப்புக்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்ற ஒன்றாகும். இரண்டாவது இவ்வாறு புலிகளின் மேலாண்மைப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் நிர்வாகம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்தலாகும். அரசாங்கத்துக்கு இது இருதலைக்கொள்ளி நிலையை ஏற்படுத்துகின்றது. அரசாங்கமென்னும் வகையில் மக்கட் தொகையாக வருவது அரசின் நற்பெயருக்கு நல்லது. ஆனால், இந்த ஆட்பெயர்வின் ஊடே வரக்கூடாதவர்கள் வந்துவிடலாமென்ற பயம் அரசுக்கு இருக்கின்றது. இதனால் அவர்களை அரச பகுதிக்குள்ளே உள்வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடனே செயற்படப் பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை நிலை வரும் மக்களுக்கு மேலும் பல அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் மக்கள் எத்தகைய பயம் காரணத்தினாலோ இடம்பெயர்கின்ற போது அப்பெயர்வு இவர்களை நிச்சயம் இரண்டு வகையில் பாதிக்கும். ஒன்று தங்கள் மேலாண்மைப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கின்றதென்பதாகும். (இது உண்மையில் ஒரு முரண்நிலையை தோற்றுவிக்கின்றது). எந்த மக்களுக்காக போராட்டம் நடைபெறுகின்றதோ அந்த மக்கள் இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் புலிகளும் யார் போகின்றார்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்பது பற்றி மிக உன்னிப்பான கவனம் வைத்திருக்க வேண்டியது அவசியமானது.

விடுதலைப் புலிகளின் பக்கமும் அரசாங்கத்தின் பக்கமும் நியாயப்பாடுகள் காணப்படுவதால் மக்களின் கஷ்டங்கள் குறைந்து விடுமென்பது கருத்தல்ல.

தமிழிலேயே ஒரு பழமொழியுண்டு "பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை'. உருவகமென்றாலும் உண்மை உண்மைதான். இதிலொரு சிக்கல் என்னவென்றால் இந்தச் சம்பவம் பற்றி பனங்காணிக்காரரும் மாட்டின் சொந்தக் காரனும் பேச விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அயல் வீட்டுக்காரர்கள் பேசாதிருக்க மாட்டார்கள். இப்போது சர்வதேச நிலையில் நடப்பது இதுதான். இலங்கையின் இனக் குழும போர் பற்றி எதுவும் செது கொள்ளுங்கள். மக்கள் தங்கள் உயிர் பயத்தால் தப்ப விரும்புவதை தடுக்காதீர்கள் என்ற குரல் எழும்புவது தவிர்க்கப்பட முடியாது. உண்மையில் இன்றைய சர்வதேச நிலையில் இது ஒரு பெரிய மனிதாபிமான பிரச்சினையாகும். கொங்கோவிலோ சோமாலியாவிலோ இல்லாத பிரச்சினை இலங்கையில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றைய நாடுகள் அதுவும் இலங்கையுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் இந்நிலைமை பற்றிப் பேசுவது ஆச்சரியமல்ல. ஒரு வகையில் பார்த்தால் கடமையும் கூட. கடன் வழங்கும் நாடுகள் இது பற்றிக் கவலைப்படுவது அத்தியாவசியமாகும். ஆனால், இதிலுள்ள மற்றைய நெருடலான பிரச்சினையென்னவென்றால் உரிமைப் போரின் சரி, பிழையோ அல்லது அரசாங்கம் எதிர்க்கும் சரி, பிழையோ என்பதைப் பற்றிப் பேசாமல் பிரச்சினை மக்கட் பெயர்விலேயே குவி நிலைப்பட்டு உள்ளது. இது ஒரு சர்வதேச அவலமாகிவிட்டது.

பி.பி.ஸி. தமிழ் ஓசை நிகழ்ச்சிகளில் பக்கற்சார்பு அற்ற உண்மைகள் கூறப்படுகின்றன. தமிழிலே கூறப்படுவதை விட பி.பி.ஸி. ஆங்கில செதிச் சேவையில் கூட இது முக்கியமாகப் பேசப்படுகின்றது. இப்பொழுது பி.பி.ஸி.யின் ஆங்கில நிருபராக கடமையாற்றும் அன்பரசன் மிக நிதானமாக எடுத்துக் கூறுகின்றார். இப்படியொரு நிலைமை காரணமாக ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நோர்வே போன்ற நாடுகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளன. மானிட நிலை அவலத்தை நிறுத்துங்கள் என்பதுதான் கோஷம். இலங்கையின் அரச ஊடகங்களைப் பார்க்கும், கேட்கும் பொழுது சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் விடுதலைப் புலிகளுக்கு மாத்திரமே இதைக் கூறுகின்றதாகச் சொல்கின்றனர். ஐ.நா. செயலாளரே தொலைபேசியில் பேசுவதென்பது வெறுமனே சுகம் விசாரிக்கும் நிகழ்ச்சியல்ல.

அரசாங்கத்துக்கு இது ஓர் உண்மையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய ஒரு கட்டத்தில் அரசின் காநகர்த்தல் எவ்வாறு அமைய வேண்டுமென்பது (அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது) மிக முக்கியமான அதேவேளையில் சிக்கல்கள் பல நிறைந்த ஒரு நிலைமையாகவேயுள்ளது. இலங்கை நிலையில் ஜனாதிபதி என்கின்ற தனிமனிதனிலும் பார்க்க இன்றைய அரச அதிகாரம் நிறுவப்பட்டுள்ள முறைமையே இந்தப் போரைத் தவிர்க்க விரும்பவில்லையெனத் தெரிகின்றது. உலக நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான அபிப்பிராயத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விடுதலைப் புலிகள் பிரச்சினையை ஒரு முற்று முழுதான பயங்கரவாத பிரச்சினையெனக் காட்டித் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்.

அரசாங்கத்துக்கு மேலுமொரு சிக்கல்பாடு உள்ளது. இலங்கைத் தமிழ் பிரச்சினைக்கான அனுபந்தமாகவேனும் ஒரு தீர்வைக் காட்டினால் சர்வதேச அபிப்பிராயம் இவர்கள் பக்கம் கூட சாயலாம். விமல்வீரவன்ஸ, சோபித தேரர்கள் அதற்கு இடம்கொடுக்கப் போவதேயில்லை. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையை பௌத்த சிங்கள நாடாக தக்கவைப்பதற்கு இந்தப் போரில் வெற்றி அவசியமென்பது சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நம்பவைத்தாயிற்று.

ஆனால், இது உள்ளூர் நிலைவரம் தான். வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் மக்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அரசாங்கத்துக்கு கஷ்டமாகவேயுள்ளது. இனிப் போரென்றால் ஆயுதங்கள் தொடர்ந்து வேண்டும். எதிராளியிடமே தாங்கிப் படையும் கப்பல் படையும் இருக்கின்றதென சொன்னால், மற்றப் பக்கம் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே. அரசாங்கம் இந்த சுழிக்குள் நின்றுகொண்டு பார்க்கின்ற பொழுது இதிலிருந்து தப்புவதற்கான வழி முன்னிலையிலுள்ள, முக்கியத்துவமுள்ள முஸ்லிம் நாடுகளுக்குச் செல்வதுதான். இந்தப் பின்புலத்தில் தான் ஜனாதிபதி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டி வந்தது எனலாம்.

தேயிலையை வைத்துக்கொண்டு எல்லா வேண்டுதலையும் முன்வைத்துள்ளனர். போர்த் தளபாடம் உட்பட சகல தளபாடங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்தப் பின்புலத்திலேயே ஜனாதிபதியின் அன்றைய ஈரானிய விஜயத்தையும் இன்றைய லிபிய விஜயத்தையும் பார்க்க வேண்டும். ஜனாதிபதி அவர்களிடத்துச் செல்வது அத்தியாவசியமாகின்றது.

ஈரானுக்கும் லிபியாவுக்கும் ஒரு சர்வதேச விம்பம் உண்டு. அதாவது, அவர்கள் மேற்குலகின் மிரட்டல்களுக்கு அடிபணியாதவர்கள். அவர்கள் பின்னர் பல சமரசங்கள் செது கொண்டுள்ளனரெனும் யதார்த்தத்தையும் மறக்கக்கூடாது. ஆனால், இந்த காநகர்த்தலில் ஒரு உத்திச் சிறப்பு இல்லாமல் இல்லை. ஆங்கிலத்திலே ஒரு பழமொழியுண்டு. The Proof of the pudding is in the eating அதாவது, சாப்பிடுவது நல்ல புடிங் தானா இல்லையென்பது சாப்பிடும் பொழுதுதான் தெரியும். கடனும் படையும் தான் இந்தப் பிரச்சினையின் "புடிங்'.

"வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக...'

No comments: